×

மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது

போபால்: மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை இறுதிகட்ட பிரசாரம் அனல் பறந்தது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் அனல்பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. மபியில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் 2ம் கட்ட வாக்குப்பதிவும் நாளை நடக்க உள்ளது.

மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து 230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் 2வது மற்றும் கடைசி கட்டமாகவும் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

மத்தியபிரசேத்தில் ஆளும் பாஜவை எதிர்த்து, காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனாலும் பாஜ, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். 9 முறை வந்து 14 பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். மேலும் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, தேசிய தலைவர் நட்டா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்துள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளை வென்று சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சி அமைத்த போதிலும், 2020ல் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜவுக்கு தாவியதால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.சட்டீஸ்கரிலும் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் 61 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நக்சல் பாதிப்புள்ள 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இங்கு 2ம் கட்ட தேர்தலில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18,833 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் ஆளும் காங், பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான், ம.பி.யில் பெண் வேட்பாளர்கள் குறைவு
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, பாஜ அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றாலும், காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்த ஆதரவு தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கிடைக்காத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் 1,875 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள் 1,692 ஆக உள்ள நிலையில், பெண்கள் 183 பேர் மட்டுமே உள்ளனர். இந்த 183ல் பாஜ வெறும் 20 பெண்களை போட்டியிட வைத்துள்ளது. காங்கிரசில் 28 பெண்கள் போட்டியிடுகின்றனர். இந்த பெண்களில் கட்சி தலைவர்களின் உறவினர்களாக காங்கிரசில் 3 பேரும் பாஜவில் 2 பேரும் உள்ளனர்.

ராஜஸ்தானில் கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் 189 பெண்கள் போட்டியிட்டனர். இதில் 24 பேர் வெற்றி பெற்றனர். நேரடி போட்டி நிலவும் பாஜ, காங்கிரஸ் தவிர 78 சிறிய கட்சிகளும் இங்கு போட்டியில் உள்ளன. இக்கட்சிகள் சார்பில் ஓரிரு பெண்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக ஆளும் மத்தியபிரதேசத்திலும் இதே நிலை உள்ளது. இங்கு 2.72 கோடி பெண் வாக்காளர்கள். இவர்களில் காங்கிரஸ் 30, பாஜ 25 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளன. இதர கட்சிகள் சார்பில் ஒருசில பெண்களே போட்டியில் உள்ளனர். மத்தியபிரதேசத்தில் 2018 சட்டமன்ற தேர்தலில் 245 பெண்கள் போட்டியிட்டு 21 பேர் வெற்றி பெற்றனர்.

இதில், பாஜவில் 11, காங்கிரஸில் 9 பெண்கள் வெற்றி பெற்றிருந்தனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் அமைச்சரவையில் 3 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் 2 பேர், தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி இம்முறை போட்டியிடவில்லை. இதனால் பாஜ அரசு, பெண்களுக்காக தாங்கள் அமல்படுத்திய சிறப்பு திட்டங்களை முன்னிறுத்தி வாக்குகளை பெற முயற்சிக்கிறது.

இரு பெரிய கட்சிகளிலும் பெண் தலைவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால், காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா நட்சத்திர பிரச்சாரகராக உள்ளார். பாஜ, ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானியை நம்பி உள்ளது. ராஜஸ்தானில் பாஜ முக்கிய தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியாவை கட்சி மேலிடம் அதிகம் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

The post மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh, Madhya Pradesh ,Anal Prananda ,Bhopal ,Madhya Pradesh ,Chhattisgarh ,Parantha Prasaram ,
× RELATED சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக...